சேலம்-ஓமலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டஅகல ரெயில் பாதையில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை


சேலம்-ஓமலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டஅகல ரெயில் பாதையில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
x

ஓமலூர்-சேலம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சேலம்

சூரமங்கலம்,

அகல ரெயில் பாதை

சேலம்-பெங்களூரு இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்ட போது, சேலம்-ஓமலூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் அகல ரெயில் பாதை விரிவுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படாமல் அந்த பாதையின் அருகே புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

இதனால் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் ரெயில் நிலையம் வரை உள்ள 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதை போதிய பயன்பாடு இன்றி இருந்தது. இதையடுத்து சேலம்-ஓமலூர் இடையே இருவழி ரெயில் பாதை திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக்கிட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. மின்வழிப்பாதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அகல ரெயில் பாதையை ஆய்வு செய்யவும், அந்த பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.

டிராலியில்...

அதன்படி புதிதாக அமைக்கப்பட்ட இந்த அகல ரெயில்பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று காலையில் தனி சிறப்பு ரெயிலில் சேலம் வந்தார். இதையடுத்து காலையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.

அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு ஓமலூர் ரெயில் நிலையம் சென்றடைந்தனர்.

சோதனை ஓட்டம்

இதையடுத்து ஓமலூர்-சேலம் இடையே ரெயில் சோதனை ஓட்டம் மதியம் 2.51 மணிக்கு ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வந்தனர். ரெயில் அதிகபட்சமாக 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஓமலூர்-சேலம் இடையே 12 கிலோமீட்டர் தூரத்தை 9 நிமிடத்தில் கடந்து சேலத்திற்கு மாலை 3 மணிக்கு வந்தடைந்தது.

இந்த ஆய்வின்போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரி சி.கே.குப்தா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ், கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப்பந்ததாரர்கள் கவுதமன், அன்பரசு, கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல்ராஜ் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story