கோவில் விழாக்களில் கலக்கும் கரகாட்டக்காரர்கள்-பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு
கோவில் விழாக்களில் கரகாட்டக்காரர்கள் கலக்கலாக நடனம் ஆடி வருகிறார்கள். அவர்கள் கலையை பாதுகாக்க பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
தேவூர்:
கரகாட்டம்
நம் நாட்டின் தலைசிறந்த நாட்டுப்புற நடனங்களில் கரகாட்டமும் ஒன்று, இன்றைய நவ நாகரீக உலகில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. இருப்பினும் தமிழ் கலாசாரத்தில் கரகாட்டம் போன்ற நடனங்கள் வாயிலாக பண்டைய கால வாழ்க்கை முறை, வரலாறு பின்பற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அழியாமல் கொண்டு செல்லப்படுவதாகும். கோவில் விழாக்களில் கரகாட்டத்துடன், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல்வேறு நடனங்கள் ஆடப்படுகிறது. கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம், பறை, (தப்பட்டை) உடுக்கை, நாதஸ்வரம், சத்துக்குழல், செண்டை, என பல்வேறு இசைகளில் இசைக்கு தகுந்தவாறு காலில் சலங்கை கட்டி கொண்டு தலையில் கரகம் வைத்தவாறு நடனம் ஆடப்படுகிறது.
தேவூர் சுற்றுவட்டார கிராமங்களில் இன்றும் பழமையை மறக்காமல் ஆண்டுதோறும் அம்மன் கோவில் விழாக்களில் பக்தி பரவசத்துடன் கரகாட்டக்காரர்கள் கரகாட்டம் ஆடி வருகின்றனர். அவர்களது கலக்கல் நடனத்தை ஏராளமானவர்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
பயிற்சி மையம்
தேவூர் பகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித வித்தியாசமான கரகங்கள் பெயர் பெற்று விளங்குகிறது. குறிப்பாக சென்றாயனூர் பகுதியில் பொங்கல் விழாவில் இளைஞர்கள் வாழை மரத்தின் அடியில் வேர் பகுதியை வெட்டி எடுத்து அதில் தங்களது தலை அளவுக்கு தகுந்தவாறு வட்ட வடிவில் செதுக்கி அதில் கரகம் செய்து ஆடுகிறார்கள். ஒக்கிலிபட்டி பகுதியில் மண் சட்டியில் பூங்கரகங்கள் செய்து ஆடுகிறார்கள். இதனை மக்கள் சுற்றி நின்று பார்த்து ரசித்து வருகின்றனர். இதேபோல் தொழில் முறை ஆட்ட கரகாட்டக்காரர்கள் தலையில் சொம்பினால் கரகம் வைத்து பல்வேறு சாகச நடனங்கள் ஆடி அசத்தி வருகின்றனர்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் கரகாட்ட கலையை ஊக்குவிக்க அரசு மாவட்டந்தோறும் பயிற்சி மையம் அமைத்து முறையான பயிற்சி வழங்கி தமிழ் கலாசாரத்தை காக்க வேண்டும் என்று கரகாட்டக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்து தேவூர் பகுதியை சேர்ந்த கரகாட்டக்காரர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்...
பாதுகாக்கிறோம்
சென்றாயனூர் பகுதியை சேர்ந்த பூங்கரகாட்டகாரர்கள்:-
நாங்கள் எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து மாரியம்மன் கோவில் திருவிழா சமயங்களில் கல்வடங்கும் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பூங்கரகம் வடிவமைத்து அம்மன் அலங்காரம் செய்வோம். பின்னர் ஊர்வலமாக கொட்டாயூர், நல்லங்கியூர், வட்ராம்பாளையம் வழியாக சென்றாயனூர் பகுதி மாரியம்மன் கோவில் வரை பல்வேறு இடங்களில் கரகாட்டம் ஆடி வருவோம். அப்போது கிராம மக்கள் எங்களை சுற்றிலும் நின்று பார்த்து உற்சாக படுத்துவார்கள். இந்த கரகாட்டத்தை பரம்பரை பரம்பரையாக அழிந்து விடாமல் ஆடி பாதுகாத்து வருகிறோம்.
கல்வடங்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி:-
நான் கடந்த 10 ஆண்டுகளாக கல்வடங்கம் மற்றும் சுற்றுவட்டார கோவில் திருவிழாக்களில் பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து நடனம் ஆடி வருகிறேன், ஆட்டக்காரர்கள் வட்டமாக நின்று தலையில் பூங்கரகம் வைத்து ஆடி வருகிறோம், மேலும் கோவில் விழாக்களில் அக்னி கரகம் தலையில் வைத்துக் கொண்டும் பல்வேறு கிராமப்புற கோவில்களில் ஆடி வருகிறோம். கரகாட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அரசு கரகாட்ட கலையை ஊக்குவிக்க முன்னுரிமை அளித்து மாவட்டந்தோறும் பயிற்சி மையம் மற்றும் விருதுகள் வழங்க வேண்டும்.
பள்ளி மாணவி
குஞ்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி:-
நான் கடந்த 20 ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் கரகம் எடுத்து ஆடி வருகிறேன், தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டம் கிராமப்புற பகுதிகளில் இன்றும் அழியாமல் உள்ளது. பரம்பரை பரம்பரையாக மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி கரகம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த கலையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரகாட்டத்தில் அசத்தும் பள்ளி மாணவி ஹரிணி:-
நான் 8-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது அப்பா மஞ்சுநாதன், அம்மா அம்மு கூலி வேலை செய்து என்னை படிக்க வைக்கின்றனர், எனக்கு 3-ம் வகுப்பு படிக்கும் போதே கரகாட்டத்தில் ஆர்வம், நான் தஞ்சாவூர் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரனிடம் முறையாக கரகம் கற்றேன். இதனையடுத்து கண்ணியமான முறையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை உலகம் அறிய செய்ய வேண்டுமென முடிவு செய்து உடலை வருத்தி பல சாகச விளையாட்டுகளுடன் கரகாட்டம் ஆடி வருகிறேன். கரகம் ஆடிக்கொண்டே தரையில் உள்ள கைக்குட்டையை எடுப்பது, தாம்பளத்தில் நின்று ஆடுவது, படியில் நடப்பது, ஊசி எடுப்பது, கண்களால் பிளேடு எடுப்பது, வளையம் சுற்றுவது, நெருப்பு கரகம் ஆடுவது, தீப்பந்தம் சுற்றுவது என பல்வேறு விளையாட்டுகளுடன் ஆடி பல்வேறு உயரிய விருதுகள் பெற்றுள்ளேன், தற்போது கின்னஸ் சாதனை நோக்கி கரகாட்டம் ஆடி வருகிறேன். எத்தனையோ பேர் கரகாட்டத்தில் ஆர்வம் இருந்தும் திறமையை வெளிகாட்ட முடியாமல் உள்ளனர், கண்ணியமான கரகாட்டத்தை அடுத்த பல தலைமுறைக்கு அழியாமல் கொண்டு செல்ல அரசு ஊக்கமளித்து மாவட்டந்தோறும் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
மனமகிழ்ச்சி
மாரனூர் விஜயா:-
நான் காலங்காலமாக மாரியம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து கரகம் எடுத்து வருகிறேன். விரதம் இருந்து கரகம் எடுத்து ஆடி வருவதால் விழாக்காலங்களில் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்றைய தலைமுறை இளம் பெண்களும் அதிகளவில் அக்னி கரகம் எடுத்து வருகின்றனர். இப்போது பலவகையான கரகாட்டம் வந்து விட்டது, பம்பை மேளதாளத்துடன் அக்னி கரகம் எடுத்து ஆடி செல்லும் போது ஒருவித அம்மன் அருள் வந்து ஆடத்தொடங்கி விடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.