குழித்துறையில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது


குழித்துறையில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் தண்டவாளத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

குழித்துறையில் தண்டவாளத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்தது

மார்த்தாண்டம் குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நேற்று பிற்பகலில் குழித்துறை- குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களுக்கு இடையே மார்த்தாண்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்துள்ள சுரங்க பாதையின் நுழைவு வாயில் அருகே தண்டவாளத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதுகுறிந்த தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரெயில் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ரெயில்கள் தாமதம்

தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தின் மீது கிடந்த மரத்தையும், அதன் கிளைகளையும் வெட்டி அகற்றினர். மேலும் அந்த பகுதியில் சிறிதளவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. அதையும் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதன்பின்பு ரெயில்கள் அந்த வழியாக இயங்க அனுமதிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தால் குழித்துறை ரெயில் நிலையம் வழியாக மாலை 5 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 2¼ மணி நேரம் தாமதமாக இரவு 7¼ மணிக்கு சென்றது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 2 பயணிகள் ரெயில்களும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டிய 2 பயணிகள் ரெயில்களும் தாமதமாக சென்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story