ஆத்தூர் அருகே லாரி-கார் மோதிய விபத்தில்மேலும் ஒரு பெண் பலி
ஆத்தூர் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார்.
ஆறுமுகநேரி:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வையகவுண்டர்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி முத்துராஜ். இவருடைய மகன் பால் முத்து பிரபு (வயது 39). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் மதியம் அங்கிருந்து காரில் திரும்பி வந்தபோது, ஆத்தூர் அருகே புல்லாவெளி பகுதியில் எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பால் முத்து பிரபு, அவருடைய தங்கையான திருவேங்கடம் அருகே சம்பாகுளத்தைச் சேர்ந்த சற்குண செல்லப்பாண்டியன் மனைவி சுதா சற்குணலில்லி (37), இவருடைய மாமியாரான தமிழ்செல்வி (63) ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பால் முத்து பிரபுவின் தாயார் பாண்டிமாதேவி (62) உள்பட 6 பேருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இரவில் பாண்டிமாதேவி பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.