கடலூர் அருகே 500 சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது
கடலூர் அருகே 500 சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது.
ரெட்டிச்சாவடி,
பெண்ணாடத்தில் இருந்து 500 சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி மாநிலம் வில்லியனூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை புவனகிரியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டினார்.
கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
புகைமண்டலமான சாலை
தொடர்ந்து லாரி முழுவதும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் லாரி நிறுத்தப்பட்ட இடம் அருகே மின் கம்பிகளும் இருந்தன. இதனால் விபரீதம் நிகழ்ந்துவிடுமோ என்று எண்ணிய அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக மின்வாரிய துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மின்வாரிய துறையினர் உடனடியாக வந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் கடலூரில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
500 சிமெண்டு மூட்டைகள் நாசம்
இருப்பினும் லாரி முழுவதும் எரிந்து தீக்கிரையானது. மேலும் லாரியில் இருந்த 500 சிமெண்டு மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது.தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடலூர்- புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.