குடிபோதையில் ஓட்டியதால் கடைமீது மோதிய லாரி


குடிபோதையில் ஓட்டியதால் கடைமீது மோதிய லாரி
x

குடிபோதையில் ஓட்டியதால் கடைமீது லாரி மோதியது. 3 மோட்டார்சைக்கிள்களும் சேதமடைந்தன.

திருப்பத்தூர்

வேலூரை அடுத்த மோட்டூர் நாவலூர் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 55), லாரி டிரைவர். இவர் வேலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை அருகே உள்ள பாலங்குப்பம் ரோட்டில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் குமார் லாரியை திருப்பத்தூர் செல்லும் சாலையில் திருப்பினார். அப்போது லாரி சாலையோரம் இருந்த ஜெயராஜ் என்பவரது பழக்கடைக்கு எதிரில் நிறுத்தி வைத்து இருந்த 3 மோட்டார் சைக்கிள் மீது மோதி, ஏறி இறங்கி, பழக்கடை மீது மோதி நின்றது.

இதில் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தது. மேலும் யாருக்கும் எந்த வித காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது லாரி டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story