கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனைவிழுப்புரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை என்று விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர்போல வீதி, வீதியாக மோடி ஓட்டு கேட்டு சென்றபோதிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை, குறுக்கு வழியில்தான் வந்தார்கள். அதுபோல் இம்முறையும் அதற்கு முயற்சி செய்யலாம். ஆனால், அது நடக்கவே நடக்காது. காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. இத்தோல்வி மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஏற்பட்டிருக்கிற ஒரு மரண அடி. இதேபோல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. படுதோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
குழந்தை திருமணம்
சாதியற்ற சமத்துவ சமூகம் படைப்பதற்காக விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 16-ந் தேதி தலித், பழங்குடி மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக வந்த குற்றச்சாட்டுக்கு தானும் குழந்தையிலேயே திருமணம் செய்ததாக தமிழக கவர்னர் கூறியிருப்பது, குழந்தை திருமணம் நல்லதுதான் என சொல்ல வருகிறாரா? சட்டத்தை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் கவர்னராகவும், அரசியலமைப்பை மீறுகிற நிலையில் அவர் செயல்படுவதாகவும் பலமுறை மனு அளித்தும் மத்திய அரசு, கவர்னரை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், முத்துக்குமரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.