பள்ளிவேன், ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம்
திருவட்டார் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி வேன், ஸ்கூட்டர் எரிந்து சேதமடைந்தன.
திருவட்டார்,
திருவட்டார் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி வேன், ஸ்கூட்டர் எரிந்து சேதமடைந்தன.
பள்ளி வேன்
திருவட்டார் அருகே உள்ள வேர்க்கிளம்பி செட்டிச்சார்விளையில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு 2 வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேன்கள் ஆலய வளாகத்தில் உள்ள பங்குதந்தை தங்கும் வீட்டின் அருகில் மேற்கூரை அமைத்து அதில் நிறுத்தி பராமரித்து வந்தனர்.
கொரோனாவுக்கு பின்னர் பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களின் வருகை குறைந்ததால் ஒரு வேனை இயக்காமல் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி இருந்தனர்.
தீப்பிடித்து எரிந்தது
இந்தநிலையில் நேற்று காலையில் நிறுத்தி வைத்திருந்த வேனில் இருந்து திடீரென புகை வந்தது. நேரம் செல்லச்செல்ல மேலும் அதிகமாக புகை வர தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த பங்குத்தந்தை மற்றும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிறிது நேரத்தில் வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அங்கு திரண்ட பொதுமக்கள் வேகமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் வேன் மிகுந்த சேதமடைந்தது.
அருகில் நிறுத்தி இருந்த மற்றொரு வேன் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வேன் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மற்றொரு சம்பவம்
மேக்காமண்டபத்தை அடுத்த வெள்ளிகோட்டை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது41), மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு சொந்தமான ஸ்கூட்டரை இரவில் வீட்டின் வெளியே சாலையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஸ்கூட்டரை சாலைேயாரம் நிறுத்திவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ஸ்கூட்டர் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி வர்க்கீஸ் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்கூட்டர் தானாக எரிந்ததா? அல்லது யாராவது மர்மநபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு ெசய்து வருகிறார்கள்.