நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வேன்
கொடைக்கானலில் நள்ளிரவில் வேன் தீப்பற்றி எரிந்தது.
கொடைக்கானல் தாலுகா அட்டுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம் டேனியல். இவர், அதேபகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கொடைக்கானல் ஆனந்தகிரி 3-வது தெருவை சேர்ந்த சைபுதீன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சைபுதீன், தனது வீட்டின் முன்பு வேனை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.
இந்தநிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வேன் திடீரென தீப்பற்றியது. சிறிதுநேரத்தில் மள, மளவென பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சைபுதீனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சைபுதீன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. வேன் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேனுக்கு யாராவது தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வேன் தீப்பற்றி எரிந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.