பெட்ரோல் விற்பனை நிலையம் முன் திடீரென்று தீப்பிடித்து எரிந்த வேன்


பெட்ரோல் விற்பனை நிலையம் முன் திடீரென்று தீப்பிடித்து எரிந்த வேன்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:30 AM IST (Updated: 20 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு திடீரென்று வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த கோவிலூர் தோப்புபட்டியை சேர்ந்தவர் வேன் டிரைவர் மாணிக்கம். நேற்று இவர் தனது நண்பர்களான நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோருடன் ஒரு வேனில் வந்தார். திண்டுக்கல்-கரூர் சாலையில், எம்.வி.எம்.நகரை அடுத்த ஆயில்மில் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்த போது வேனுக்கு பெட்ரோல் நிரப்ப முடிவு செய்தனர்.

அதன்படி அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேனுக்கு பெட்ரோல் நிரப்பினர். பின்னர் வேனை இயக்க (ஸ்டார்ட்) முயன்ற போது என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 3 பேரும், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களுடன் சேர்ந்து வேனை சிறிது தூரம் தள்ளி சென்று நிறுத்தினர். அதற்குள் வேன் மள, மளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு, தீயை அணைக்க முயன்றனர்.

அதற்குள் வேன் முழுவதும் தீப்பற்றி கொண்டதால், அவர்களால் அதை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. வேனில் தீப்பிடிக்க தொடங்கியதும் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வெளியே கொண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story