லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
க.பரமத்தி அருகே லாரி மீது வேன் மோதி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ெறாரு விபத்தில் 2 பேர் சிக்கினர்.
வாலிபர் பலி
க.பரமத்தியை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (வயது 34). இவர் க.பரமத்தியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை க.பரமத்தியிலிருந்து காய்கறி வாங்குவதற்காக கரூருக்கு மினி வேனை ஓட்டி சென்று கொண்டிருந்தார். இவருடன் இவரது கடையில் வேலை செய்யும் ராமநாதபுரத்தை சேர்ந்த சக்தி என்கிற முனிய சக்தி (27), நல்லிசெல்லி பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி (61) ஆகியோர் உடன் சென்றனர்.
மினி வேன் பவுத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதியது. இதில் சக்தி என்கிற முனியசக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜ்கண்ணன், பெரியசாமி ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் பிள்ளை வீதி சந்தை சேர்ந்தவர் கோபி (43). லாரி டிரைவர். இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இருந்து லாரியில் கொய்யாப்பழம் லோடு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். பாலத்துறை பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, புகழூர் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் (20), அதே பகுதியை சேர்ந்த ராகுல் (22) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயந்த், ராகுல் ஆகியோர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.