மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
நாகை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
வேன் மோதியது
நாகை அருகே பொரவச்சேரி பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் அருண்குமார் (வயது24). இவர் நாகையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு நாகையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொரவச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த சுற்றுலா வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேனை ஓட்டி வந்த பெங்களூர் தெற்கு, உத்திரகல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.