குப்பைகளை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து


குப்பைகளை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
x

கொடைக்கானல் மலைப்பாதையில் குப்பைகளை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல்

கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் சார்பில், நகரில் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிற குப்பைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு பிரகாசபுரம் அருகே உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. அதன்படி நேற்று காலை வழக்கம்போல குப்பைகளை ஏற்றிக்கொண்டு, நகராட்சிக்கு சொந்தமான வாகனம் ஒன்று செண்பகனூர் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அதனை தனசேகர் (வயது 25) ஓட்டினார். அங்குள்ள கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை டிரைவர் திருப்பினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த குப்பைகள் சாலையில் சிதறி கிடந்தது. மேலும் டிரைவர் தனசேகர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், தனசேகரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய வாகனம், புதிதாக வாங்கப்பட்டு சில நாட்களே ஆனது குறிப்பிடத்தக்கது.


Next Story