வாகனங்கள் பழுது பார்க்கும் மையத்தை சூறையாடி ரூ.2 லட்சம் கொள்ளை
நாகர்கோவிலில் வாகனங்கள் பழுது பார்க்கும் மையத்தை சூறையாடி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வாகனங்கள் பழுது பார்க்கும் மையத்தை சூறையாடி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சர்வீஸ் மையம்
நாகர்கோவிலை அடுத்த ஆளூரை சேர்ந்தவர் பிஜூ. இவர் பால்பண்ணை அருகே வாகனங்கள் பழுது மற்றும் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இந்த மையம் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் ஒப்பந்தம் முடிவதற்கு முன்பாக அங்கிருந்து காலி செய்யும்படி கட்டிட உரிமையாளர் கூறியுள்ளார். இதற்கு பிஜூ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பிஜூவுக்கும், கட்டிட உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிஜூ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
முகமூடி கும்பல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து வந்து பிஜூவின் சர்வீஸ் மையத்தின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சூறையாடியதோடு, அங்கு வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்மகும்பல் திருடி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் பிஜூ புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சர்வீஸ் மையத்திற்குள் புகுந்த முகமூடி கும்பல் யார்? என்ற விவரம் சரிவர தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் மற்றும் திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ வைரல்
இதற்கிடையே சர்வீஸ் மையத்திற்குள் முகமூடி கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.