குடிநீரை தேடி தவிக்கும் கிராமம்
கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம் குடிநீரை தேடி அலைவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம் குடிநீரை தேடி அலைவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
உப்புநீராக மாறிய நிலத்தடி நீர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் காடுவெட்டி கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரும் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அன்றாடம் தேவைப்படும் தண்ணீருக்கே பற்றாக்குறை இருப்பதால் குடிநீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
அலையும் மக்கள்
குடிநீருக்காக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் குடங்கள், பாத்திரங்களுடன் தினமும் 2 கி.மீ. தூரம் அலைகிறார்கள். சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் தண்ணீரை குடங்களில் பிடித்து வருகிறார்கள். பெண்கள் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்து பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சில நேரங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் குடிநீரை தேடி கிராமம், கிராமமாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் பிடித்து வர முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக கிடைக்க வேண்டிய குடிநீர் கூட இல்லாமல் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் தவித்து வருகிறார்கள்.
தினமும் குடிநீர்
தினந்தோறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் மூலம் காடுவெட்டி கிராமத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ள குடிநீரை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் போதிய குடிநீர் கிடைக்காமல் அங்கு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீரை எடுப்பதற்கு பக்கத்து கிராமத்திற்கு சென்று வருவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. பிற வேலைகளை பார்க்க முடியவில்லை. அன்றாடம் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகிறோம்.
கொள்ளிடம் ஆறு அருகில் இருந்தும், ஆற்று தண்ணீர் உப்பு தண்ணீராக மாறி விட்டதால் அதை பயன்படுத்த முடியவில்லை. காடுவெட்டி கிராமத்தில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்
இதுகுறித்து காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது:- கொள்ளிடத்தில் கடைகோடி பகுதியாக அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கடற்கரையோர கிராமங்களான இவற்றின் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றுத்தண்ணீர் எப்போதும் உப்பு தண்ணீராக உள்ளது. இதனால் இந்த கிராமங்களில் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி விட்டது. இங்கு உள்ள 4 ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பி வாழ்கிறார்கள்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வடரங்கம் கிராமத்திலிருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் இந்த கடலோர பகுதி கிராமத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவு. எனவே குடிநீர் போதுனமானதாக இல்லை. மேலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை கடலோர கிராமங்களில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.