காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

நெல்லை, தென்காசியில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி

நெல்லை, தென்காசியில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, மகளிர் நலச்சங்கம் சார்பில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காதுகேளாதோர் மகளிர் நலச்சங்க தலைவர் பிரீஸ்கில்லா தலைமை தாங்கினார்.

தனியார் வேலைவாய்ப்பில் காதுகேளாதோருக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவமிக்க சைகை மொழி ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

காதுகேளாதோர் மகளிர் நலச்சங்க துணைத்தலைவர் லட்சுமி, செயலாளர் அன்னாள், இணை செயலாளர்கள் ஜான்சி பிரபாஜினி, பொருளாளர் காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை காதுகேளாதோர் புரிந்து கொள்ளும் வகையில் செய்கைகள் மூலமாக விளக்கினர்.

தென்காசி

இதேபோன்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், காது கேளாதோர் நலச்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஏசுதாசன் ராஜா, பஞ்சவர்ணம், பொதுச்செயலாளர் முகமது லத்தீப், பொருளாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, முத்துகுமார், கோபால், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர வைத்து, அவர்களுக்கு தேனீர் வழங்கி, அவர்களது கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைத்து கடிதம் வழங்கினார். இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.



Next Story