மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்
x

குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் எள்ளுவிளை ஊராட்சிக்குட்பட்ட வைரா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 49), மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் இவரது வீட்டுக்கு செல்லும் பாதை மற்றொரு நபருக்கு சொந்தம் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.

அதைத்தொடர்ந்து ஜெபசிங் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலருக்கும் நான்கு ஆண்டுகளாக மனு அளித்து குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (ராஜாக்கமங்கலம் வட்டாரம்) குழுவினருடன் ஜெப சிங் குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்.

இதில் ராஜாக்கமங்கலம் வட்டார தலைவர் ஜான்சன், மாவட்ட செயலாளர் முருகேசன் மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து கேள்விப்பட்டதும் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி, ராஜாக்கமங்கலம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா உள்பட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் துணைத் தலைவர் வேலு கிருஷ்ணன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றும் கூறினர். அதற்கு போராட்டக்காரர்கள் தரப்பில் இணைப்பு வழங்கப்படும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறினர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மாற்றுத்திறனாளியின் வீடு இருந்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போதும் தீர்வு ஏற்படாததால் அவர்கள் திரும்பி சென்று மேலதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். காத்திருப்பு போராட்டம் இரவும் தொடர்ந்து நீடித்தது.


Next Story