களைகட்டும் தீபாவளி....கவலை தரும் விலைவாசி


களைகட்டும் தீபாவளி....கவலை தரும் விலைவாசி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும், புத்தாடைகளும் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், நீலகிரியில் தீபாவளி களை கட்ட தொடங்கிய போதும், பண்டிகைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் விலைவாசி கவலை அளிப்பதாகவே உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

நீலகிரி

தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும், புத்தாடைகளும் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், நீலகிரியில் தீபாவளி களை கட்ட தொடங்கிய போதும், பண்டிகைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் விலைவாசி கவலை அளிப்பதாகவே உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. வாழ்க்கையில் இருளை நீக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடைகள் அணிந்து பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உண்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்கின்றனர்.

ஆண்டுதோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி வாழ்த்து அட்டைகள் விற்பனை தொடங்கி இனிப்பு, கார வகைகள், பட்டாசுகள் வரை விற்பனை களை கட்டும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

கடும் சிரமம்

பட்டாசு, இனிப்பு, கார வகைகள் மற்றும் துணி வகைகள் விலை சற்று உயர்ந்து உள்ளது. குறிப்பாக பட்டாசு 25 முதல் 35 சதவீதம் வரையும், துணிகள் 10 முதல் 20 சதவீதம் வரை விலை அதிகரித்து உள்ளன. மேலும் அரிசி, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலத்தில் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கொண்டாட முடியாமல் உள்ளோம்

நடுகூடலூர் தோட்ட தொழிலாளி தனபாக்கியம்:-

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் தீபாவளி பண்டிகை களை இழந்து காணப்பட்டது. தற்போது பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடலாம் என எதிர்பார்த்து இருந்தேன். ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள், துணிகள், இனிப்புகள், பலகாரங்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் விறகு அடுப்பை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் 1 லிட்டர் கூட வழங்குவதில்லை. பச்சை தேயிலைக்கு விலை இல்லாததால் விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அன்றாட பிழைப்புக்கு வழியில்லாமல் திணறி வருகிறோம். இதனால் தோட்ட தொழிலாளர்கள் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாமல் கவலையில் உள்ளனர்.

வருவாய் இன்றி பாதிப்பு

கூடலூர் கே.கே.நகர் ஜோதி மலர்:-

சர்க்கரை, எண்ணெய் என அனைத்து பொருட்களின் விலையும் பல்வேறு காரணங்களால் உயர்ந்து விட்டது. தீபாவளி பண்டிகையை குழந்தைகளுக்காக கொண்டாட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதை பயன்படுத்தி பட்டாசு, துணிகள், பலகார வகைகள் விலை உயர்ந்து விடுகிறது.

கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேயிலை எஸ்டேட் நிர்வாகங்களும் தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்காமல் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதால், தீபாவளி பண்டிகையை பல்வேறு சிரமங்களுக்கு இடையே கொண்டாட வேண்டியதாக உள்ளது.

பட்டாசு விலை உயர்வு

ஊட்டி கூட்டுறவு சங்க பட்டாசு விற்பனையாளர் நாயகம்:-

ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்வதால், பட்டாசு வாங்க மக்கள் வருகை குறைந்து உள்ளது. கடந்தாண்டு 40 வகையான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.1,100-க்கு விற்கப்பட்டது. தற்போது விலை உயர்ந்து ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 34 வகையான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.900-த்தில் இருந்து ரூ.1,050 ஆக உயர்ந்து உள்ளது. பட்டாசு விலை உயர்வு காரணமாக குறைந்த பட்டாசுகள் அடங்கிய பெட்டிகளை ரூ.500, ரூ.750-க்கு விற்பனை செய்து வருகிறோம். மேலும் விலை உயர்வால் குறைந்த அளவே பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.

ஆன்லைனில் வாங்குகிறோம்

கோத்தகிரி சரவண குமார்:-

தனி நபரின் வருமானம் உயராத நிலையில், விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை பாதிக்கிறது. உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஏராளமான தள்ளுபடிகளை வழங்குகின்றனர். எனவே, ஆடைகள், பட்டாசுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குகிறோம். இதனால் குடும்பத்தினரை கடைகளுக்கு அழைத்துச் சென்று ஆடைகளை வாங்கும் செலவு குறைகிறது. மேலும் ஆர்டர் செய்த ஆடைகள் மற்றும் பொருட்கள் பிடிக்கவில்லை என்றால், 7 நாட்களுக்குள் திருப்பி அனுப்பினால் உடனடியாக நாம் செலுத்திய தொகை மீண்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எனவே, நஷ்டம் எதுவும் ஏற்படுவதில்லை. பொருட்களும் தரமாக உள்ளன. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதால், உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் கூட்ட நெரிசல், நேர விரையம் மற்றும் வீண் செலவுகளை குறைப்பதற்காக ஆன்லைனில் வாங்குகிறோம்.

தரமாக தயாரிக்க வேண்டும்

முத்தோரை விவசாயி முருகேஸ்:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை விட மத்தாப்பு, சங்கு சக்கர உள்ளிட்ட பட்டாசுகளின் விலை 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இருந்தபோதிலும் குழந்தைகளுக்காக அதிக விலை கொடுத்து பட்டாசு வாங்கி கொடுத்து வருகிறோம்.

இதேபோல் சில கடைகளில் தீபாவளியையொட்டி இனிப்பு, கார வகைகள் விலை உயர்ந்து உள்ளது. பண்டிகையின் போது அதிகம் பேர் வாங்குவார்கள். எனவே, வழக்கத்தை விட அதிகமாக இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்படும். இதனை முறையாக தரமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

(பாக்ஸ்) இனிப்பு, கார வகைகள் விலை

நீலகிரி மாவட்டத்தில் சாதாரண வகை இனிப்புகள் ஒரு கிலோ ரூ.360 வரை விற்பனை செய்யப்படுகிறது. நெய் சேர்க்கப்பட்ட இனிப்புகள் கிலோ ரூ.520 வரை விற்பனையாகிறது. கார வகையில் கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த 4 ஆண்டுகளாக இனிப்பு, கார வகைகள் மேற்கண்ட விலையில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது சமையல் எண்ணெய், பிற பொருட்கள் விலை உயர்ந்தாலும் அதே விலையில் விற்கிறோம். லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். நீலகிரியில் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.90-ல் இருந்து ரூ.100 ஆகவும், சன்பிளவர் ஆயில் ரூ.150-ல் இருந்து ரூ.155 ஆகவும், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ரூ.200 ஆகவும், நல்லெண்ணெய் ரூ.280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.



Next Story