ஒடிசா ரெயில் விபத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
ஒடிசா ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்திற்கு ரெயில்வே துறையும், மத்திய அரசின் அலட்சிய போக்கும்தான் காரணம் என அத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ரெயில்வே மண்டல பொதுமேலாளர், அங்குள்ள பிரச்சினை குறித்து ரெயில்வே அமைச்சகத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த விபத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்.
ரெயில்வே மந்திரி பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேலும் ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி நுழைந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
சாதிய வன்முறை
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களுக்குள் ஆதிதிராவிட மக்கள் சென்று வழிபாடு செய்ய முடியாத நிலை உள்ளது. கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.
தனி நபர்களின் கோவிலாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. மேல்பாதி கிராம மக்களின் உரிமை கோரி வருகிற 9-ந் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதே போன்று மதுரையை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வன்முறை கட்டவிழ்த்தவிடப்பட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து 12-ந் தேதி மதுரையில் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமணம் தொடர்பாக இருவிரல் பரிசோதனை விவகாரத்தில், தமிழக கவர்னர் முன்னுக்கு பின் முரணான கருத்துகளை சொல்லி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
தொகுதி வரையறை
தென்னிந்திய மாநிலங்கள் ஆதரவின்றி தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தொகுதி வரையறை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மாநிலங்கள் வாரியாக கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள குற்றவாளிகளை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் பால.அறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் உள்பட கட்சி நிர்வாகி பலர் உடன் இருந்தனர்.