கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
x

ஆர்.கே.பேட்டை அருகே கார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்தது அம்பலமானது.

ஆர்.கே.பேட்டை,

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவர் திருவள்ளூர் அருகே பன்னூர் ரோட்டில் உள்ள தனியார் கார் உதிரிப்பாக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு, உறவுக்கார பெண்ணான காயத்ரி (27) என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஜீவிதா (2) என்ற மகள் உள்ளார்.

நேற்று முன்தினம் யுவராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் நகக்கீறல்களும், காயங்களும் காணப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜின் தந்தை ஆறுமுகம், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காயத்ரி தனது கையை கத்தியால் அறுத்து கொண்டார். அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கள்ளக்காதல்

போலீசார் காயத்ரியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் சிலருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் காயத்ரியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், காயத்ரிக்கும் திருமணத்துக்கு முன்பே சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது காதல் ஏற்பட்டது. இதையறிந்த காயத்ரியின் பெற்றோர், அவரை உறவுக்கார வாலிபரான யுவராஜூக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகும் காயத்ரிக்கு சீனிவாசனுடன் கள்ளத்தொடர்பு தொடந்தது. இருவரும் திருத்தணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தனர். இதனை அறிந்த யுவராஜ் மனைவியை கண்டித்து வேலைக்கு செல்ல கூடாது என்று கூறினார். இதனை செல்போனில் காயத்ரி சீனிவாசனுக்கு தெரிவித்தார்.

4 பேர் கைது

இதனால் சீனிவாசன் தனது நண்பர்களான திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த ஏமநாதன், மணிகண்டன் ஆகியோரை அழைத்துக் கொண்டு சீனிவாசன் வீட்டுக்கு சென்றார். பின்னர் கள்ளக்காதலி காயத்ரி துணையுடன் சீனிவாசன், மணிகண்டன், ஏமநாதன் ஆகியோர் யுவராஜை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிகிச்சை பெற்று வந்த யுவராஜின் மனைவி காயத்ரி, கள்ளக்காதலன் சீனிவாசன், அவருடைய நண்பர்களான மணிகண்டன், ஏமநாதன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story