வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானை
கூடலூர் அருகே காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
காட்டு யானை புகுந்தது
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி தேயிலை தோட்டங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மனித-வனவிலங்கு மோதல்களும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி அண்ணா நகரில் ஒற்றை காட்டு யானை புகுந்தது.
இதனால் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானையை கண்டு பெண்கள், குழந்தைகள் வீடுகளுக்குள் ஓடினர். பின்னர் பொதுமக்களின் வீடுகளை காட்டு யானை முற்றுகையிட்டது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அப்பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அசம்பாவித சம்பவங்கள்
பின்னர் பட்டாசுகளை வெடித்ததால் நீண்ட நேரத்துக்குப் பிறகு காட்டு யானை அங்கிருந்து சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் வருவதால் வீடுகளை விட்டு வெளியே நடமாட முடியாத நிலை தொடர்கிறது. இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என அச்சமாக உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும் வனத்துறையினர் முன் வர வேண்டும் என்றனர். இதேபோல் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வந்து கொண்டிருந்ததால், சாலையை கடக்க முடியாமல் காத்திருந்தது. பின்னர் வந்த வழியாக மீண்டும் புதருக்குள் சென்றது.