ஆசனூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் ½ ஏக்கர் கரும்பு பயிர் சேதம்


ஆசனூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் ½ ஏக்கர் கரும்பு பயிர் சேதம்
x

ஆசனூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிரை சேதப்படுத்தியது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிரை சேதப்படுத்தியது.

காட்டு யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தைப்புலி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. சில நேரம் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி நேற்று காலை சென்டர்தொட்டி கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள விவசாயி குருகாரப்பா (வயது 51) என்பவரின் கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்தது. அதன்பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகளை நாசம் செய்தது.

கரும்பு பயிர் சேதம்

அப்போது வீதிகளில் சுற்றி திரிந்த நாய்கள் யானையை பார்த்ததும் குரைத்தன. உடனே ஆவேசமடைந்த யானை பிளிறியபடி நாய்களை துரத்தியது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பொதுமக்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களையும் யானை பின்னால் துரத்தி சென்றது. இதனால் அலறியடித்துக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து அங்குள்ள ஒரு மானாவாரி நிலத்துக்குள் யானை புகுந்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகளும் யானையை கண்டதும் மிரண்டு ஓடின. பின்னர் அங்கிருந்து வெளியேறிய யானை தெருவுக்குள் புகுந்து அங்கும் இங்கும் சிறிது நேரம் சுற்றி திரிந்தது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை தானாக காட்டுக்குள் சென்றது. யானையால் சுமார் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானை ஊருக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story