கோடநாடு மலையடிவாரத்தில் காட்டு யானைகள் முகாம்
கோடநாடு மலையடிவாரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
கோத்தகிரி,
சமவெளி பகுதிகளில் வறட்சி நிலவும் போதும், பலாப்பழ சீசன் சமயங்களிலும் உணவு தேடி காட்டு யானைகள் இடம் பெயர்ந்து கோத்தகிரி அருகே முகாமிடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது கோத்தகிரி அருகே கோடநாடு மலையடிவாரம், கடசோலை, குள்ளங்கரை, ரங்கசாமி மலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன. அவை அருகே உள்ள கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாமல் தடுக்க வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் விவசாயிகள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் காட்டு யானைகள் அருகே உள்ள கிராம சாலைகளுக்கு வராமல் தடுக்கவும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் அருகே சாலையில் சென்ற வாகனங்களை ஆண் காட்டு யானை ஒன்று வழிமறித்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தொலைவிற்கு முன்பாகவே நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.