லோயர்கேம்பில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் காட்டு யானை; தென்னந்தோப்புக்குள் புகுந்து அட்டகாசம்
கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ளது. அங்குள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ளது. அங்குள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
அரிக்கொம்பன் காட்டு யானை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை ஆகிய பகுதிகளில் 7 பேரை கொன்றதுடன், விளை நிலங்கள், வீடு, கடைகளை உடைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானை, கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த யானையை வனத்துறையினர், தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் கொண்டுபோய் விட்டனர். தற்போது அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை மணலாறு எஸ்டேட் பகுதியிலும், பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியிலும் மாறி, மாறி வலம் வருகிறது.
தமிழக-கேரள மாநில எல்லைகளில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்குள் அவ்வப்போது அரிக்கொம்பன் காட்டு யானை புகுந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் புகுந்து வீடுகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று தீர்த்தது.
லோயர்கேம்ப்பில் முகாம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் ரோஜாப் பூகண்டம் வழியாக கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதிக்கு அரிக்கொம்பன் காட்டு யானை இடம் பெயர்ந்தது.
தற்போது அந்த காட்டு யானை லோயர்கேம்ப் கழுதைமேட்டுபுலம் பகுதியில் முகாமிட்டுள்ளது. அங்குள்ள தனியார் தென்னந்தோப்புக்குள் காட்டு யானை புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது. அடுத்தடுத்து உள்ள தோட்டத்துக்குள்ளும் இது புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தமிழக, கேரள வனத்துறையினர் மற்றும் போலீசார், அரிக்கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் தோட்டங்களுக்குள் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதித்தனர். ஏற்கனவே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை வெளியேற்றினர்.
விவசாயிகள் பீதி
அரிக்கொம்பன் காட்டு யானை லோயர்கேம்ப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பீதியில் உள்ளனர். எனவே அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அரிக்கொம்பன் காட்டு யானை கேரள மாநில எல்லையில் இருந்து தற்போது லோயர்கேம்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. இந்த யானை அப்படியே நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கம்பம்மெட்டுக்கு சென்று அங்கிருந்து பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கே இந்த காட்டு யானை மீண்டும் சென்றுவிடும் என்று நம்புகிறோம். விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். யானை நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.