வாகனங்களை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பலாப்பழ சீசன்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் முள்ளூர் கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உலா வருகின்றன.
கடந்த வாரம் முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலையை கடக்க முயன்றபோது வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து இடையூறு செய்ததால் ஆத்திரமடைந்த யானை அவர்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தட்டப்பள்ளம் பகுதியில் சாலையில் உலா வந்தது. பின்னர் அந்த யானை சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை திடீரென தாக்கியது. இதனால் ஜீப்பில் இருந்த 2 பேர் அச்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜீப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொடர்ந்து அந்த காட்டு யானை அந்த வழியாக சென்ற வாகனங்களையும் வழிமறித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல இரவு 7 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்சிமுனை பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் யானையை கடந்து செல்ல முயன்றனர். அவர்களை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறையினர் எச்சரிக்கை
இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். சாலையோரத்தில் நிற்கும் காட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.