வாகனங்களை விரட்டும் காட்டு யானை
வாகனங்களை விரட்டும் காட்டு யானை
கூடலூர்
கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால், வனம் பசுமையாக மாறி உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் முதுமலை சாலையோரம் காட்டு யானைகள் கூட்டம் காணப்பட்டது. இதனால் கூடலூர் மற்றும் மைசூரு பகுதியில் இருந்து வந்த வாகன டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளை கண்டு வாகனங்களை மெதுவாக ஓட்டி சென்றனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர். இந்த சமயத்தில் தனியாக நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென பிளிறியவாறு வாகனங்களை துரத்த தொடங்கியது.
இதைக்கண்ட சுற்றுலா பயணிகள், டிரைவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்றனர். இதேபோல் கடந்த சில தினங்களாக காட்டு யானை வாகனங்களை விரட்டும் சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே காப்பக பகுதியில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.