தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
பழனி அருகே தென்னை மரங்களை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியது.
பழனி அருகே கோம்பைப்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த பகுதியில், காட்டு யானை ஒன்று விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் மனோகரன், கர்ணன், மணி ஆகியோரது தோட்டங்களுக்குள் புகுந்து 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. இதேபோல் பல மரங்களில் தென்னை ஓலையை முறித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து கோம்பைப்பட்டி விவசாயிகள் கூறுகையில், கோம்பைப்பட்டி கிராமத்தில் சுற்றித்திரியும் யானையால் கூலி வேலைக்கு ஆட்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விவசாய பணி முற்றிலும் முடங்கி விட்டது. யானை சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். இதற்கிடையே காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.