வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை


வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

தேவர்சோலை அருகே நள்ளிரவில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர்.

நீலகிரி

கூடலூர்,

தேவர்சோலை அருகே நள்ளிரவில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர்.

காட்டு யானை

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் அடிக்கடி வருவதால் ஆதிவாசி மக்கள் நிம்மதி இழந்து உள்ளனர். இந்தநிலையில் கோடை வறட்சியால் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், காட்டு யானைகள் பயிர்களை தேடி ஊருக்குள் வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு மச்சிக்கொல்லி கிராமத்துக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சைதலவி என்பவரது விளைநிலத்தில் இருந்த வாழை, பாக்கு மரங்களை தின்று சேதப்படுத்தியது. தொடர்ந்து பஷீர், மொய்தீன் குட்டி ஆகியோரின் நிலங்களில் இருந்த பயிர்களை நாசம் செய்தது.

தூக்கத்தை இழந்த பொதுமக்கள்

பின்னர் அதிகாலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை பேபி நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவித்தனர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானை செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமம் தொடங்கி மச்சிக்கொல்லி மட்டம், பேபி நகர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் தினமும் வருகிறது.

இதனால் பயிர்கள் தொடர்ந்து சேதமாவதுடன், தூக்கமும் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானை வருகையை தடுக்க வேண்டும் என்றனர்.

குன்னூர்

இந்தநிலையில் குன்னூர் அருகே ட்ரூக் டேன்டீ குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அப்பகுதியில் வாழை மரங்கள், கோரை புற்கள் அதிகமாக உள்ளதால், அதனை உண்பதற்காக யானைகள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். குறிப்பாக இரவு மற்றும் பகல் நேரங்களில் உலா வருவதால், அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story