ஜீப்பை வழிமறித்த காட்டு யானை


ஜீப்பை வழிமறித்த காட்டு யானை
x

கொடைக்கானல் கீழ்மலைக்கிராமத்தில் காட்டு யானை ஒன்று ஜீப்பை வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பாச்சலூரை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 26). அவருடைய மனைவி பிரியா. கர்ப்பிணியான இவரை மருத்துவ பரிசோதனைக்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அருண்பாண்டி ஜீப்பில் நேற்றுமுன்தினம் அழைத்து சென்றார். ஒட்டன்சத்திரம்-பாச்சலூர் மலைப்பாதையில், தட்டக்குழிக்காடு பகுதியில் ஜீப் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று ஜீப்பை வழிமறித்தது. இதனால் மிரண்டு போன அருண்பாண்டி, ஜீப்பை மலைப்பாதை ஓரமாக ஓட்டி சென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இருப்பினும் ஜீப்பை பின்தொடர்ந்து காட்டு யானை சிறிதுதூரம் விரட்டி சென்றது. ஆனால் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஜீப் சென்று விட்டது. இதனால் அருண்பாண்டி, பிரியா ஆகியோர் உயிர் தப்பினர்.

ஜீப்பை வழிமறித்த யானையை அங்கிருந்த விவசாயி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்தார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொடைக்கானல் கீழ்மலைக்கிராமங்களில் சமீப காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் மாணவ-மாணவிகள் யானைகளை கண்டு அச்சப்படுகின்றனர். எனவே யானைகளை வனத்துறையினர் கண்காணித்து, அவைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story