வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு
பந்தலூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தட்டாம்பாறையில் காட்டு யானை புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை மிதித்து நாசம் செய்தது. நேற்று அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் உலா வந்த யானை வாகனங்களை வழிமறித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானையை விரட்டினர். பின்னர் அங்கிருந்து அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முகாமிட்டது. இதனால் அங்கு வந்த நோயாளிகள் பீதி அடைந்தனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 அய்யப்பன் கோவில் அருகே தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. தகவல் அறிந்த சேரம்பாடி வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.