காட்டு யானை, டாப்சிலிப்பில் விடப்பட்டது
தர்மபுரியில் பிடிபட்ட காட்டு யானை டாப்சிலிப்பில் அருகே வரகளியாறில் விடப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
தர்மபுரியில் பிடிபட்ட காட்டு யானை டாப்சிலிப்பில் அருகே வரகளியாறில் விடப்பட்டு உள்ளது.
காட்டு யானை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்திற்குள் புகுந்து 2 காட்டு யானைகள் விளைநிலங்களில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் அட்டகாசம் செய்து வரும் யானைகளை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை சின்னதம்பி அங்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு சின்னதம்பி யானையை விளைநிலத்திற்குள் கொண்டு சென்று நிறுத்தினர். இதற்கிடையில் அங்கு வந்த காட்டு யானையை, சின்னதம்பி யானை மடக்கியது. பின்னர் கால்நடை டாக்டர்கள் துப்பாக்கி மூலம் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மயங்கிய யானையை கயிறு கட்டி கிரேன் மூலம் வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டது.
வனப்பகுதியில் விடப்பட்டது
பின்னர் பிடிபட்ட யானையை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு காட்டு யானையை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது துணை இயக்குனர் பார்கவ தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள் சுந்தரவேல், புகழேந்தி மற்றும் கால்நடை டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிடிபட்ட யானைக்கு 20 வயது இருக்கும். தந்தம் இல்லாத ஆண் யானை (மக்னா) ஆகும். இந்த யானை உணவு தேடி விளைநிலங்களுக்குள் புகுந்து பழகி உள்ளது. இதன் காரணமாக யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்தனர். மேலும் யானைக்கு மயக்கம் தெளிந்து விட்டதா, சரியாக உணவு சாப்பிடுகிறதா என்று கண்காணிக்கப்படும். தற்போது யானை தண்ணீர் குடிக்கிறது. கிடைக்கிற உணவை சாப்பிடுகிறது. அதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கும்கி பயிற்சி பெற்ற சின்னதம்பி யானை முதல் முறையாக காட்டு யானையை பிடிக்க உதவி உள்ளது என்றனர்.