சேலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
கணவரை மீட்டுத்தரக்கோரி பெண் தற்கொலைக்கு முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
இந்த நிலையில் சங்ககிரி தாலுகா கரையானூர் கன்னந்தேரி கிராமத்தை சேர்ந்த வனிதா என்ற பெண் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்த அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் இருந்த விஷ பாட்டிலை பிடுங்கி கொண்டனர்.
கணவரை மீட்டுத்தர வேண்டும்
பின்னர் போலீசார் வனிதாவிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:-
எனது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. கணவரை கண்டித்த போது எனது கணவர் தொடர்பு வைத்து உள்ள பெண்ணின் கணவர் என்னை தாக்கினார். எனவே என்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவரை கள்ளக்காதலியிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கொங்குப்பட்டி ஊராட்சி
காடையாம்பட்டி தாலுகா கொங்குப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அதில் கொங்குப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு போதிய இடவசதி இல்லை என்று கூறி மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு, கொங்குப்பட்டியிலேயே புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
சிக்கன நாணய சங்கம்
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் டெபாசிட் தொகை, கடன் வழங்கியது, பணியாளர் நியமித்து சம்பளம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வழியில் ரூ.1 கோடியே 30 லட்சம் முறைகேடு நடந்தது. இது கண்டுபிடிக்கப்பட்ட போது முறைகேடு செய்த பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் திருப்பி செலுத்தி உள்ளனர். இருப்பினும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியும், பள்ளி கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.