கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (40). இவரும், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ருக்மன் அலியின் மகள் செரினா பேகமும்(32) மதுரையில் ஒன்றாக வேலை பார்த்தபோது, காதலித்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், நேற்று மதியம் பாக்கியராஜ் செரினா பேகத்திடம் பணம் கேட்டபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து செரினா பேகம் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இறங்கி தேடியபோது செரினா பேகம் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாக்கியராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.