ஊராட்சி மன்ற அலுவலகம் முன் குடும்பத்தினருடன் பெண் தர்ணா


ஊராட்சி மன்ற அலுவலகம் முன்  குடும்பத்தினருடன் பெண் தர்ணா
x

இலவச வீட்டுமனை வழங்காததால் ஆத்திரமடைந்த பெண், தனது குடும்பத்தினருடன், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வேலூர்

தர்ணா போராட்டம்

கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம், நீலகண்ட பாளையம், நத்தமேடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் இன்பநாதன். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் பழுதடைந்த வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் இலவசவீட்டு மனை கேட்டு பலமுறை கலெக்டருக்கும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளனர்.

பலமுறை அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து எடுத்துக் கூறியும் இதுவரை வீட்டுமனை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தேவி தனது குடும்பத்தினருடன் பி.கே.புரம் ஊராட்சி மன்றம் எதிரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் என்.டி.கண்ணன், கிராமநிர்வாக அதிகாரி ஜி.சங்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேவியின் கணவர் வயிற்றில் அறுவைசிகிச்சை பெற்று போதிய வருவாய் இல்லாத நிலையில் குடும்பம் நடப்பதே போராட்டமாக இருக்கிறது. வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் கூரை பிய்ந்து ஆபத்தான நிலையில் தொங்கியபடி உள்ளது. தொடர்ந்து பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் வாழ்வாதாரத்திற்கு வீட்டு மனை வேண்டும். என்றார்.

இதைக் கேட்டறிந்த அதிகாரிகள் மேல் அதிகாரிகளுடன் பேசி விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story