ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த பெண்
சாத்தூர் அருகே ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த பெண், கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த பெண், கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு சென்றார்
சாத்தூர் தாலுகா சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 68). இவரது மகள் ராஜபாண்டி (33). இவர் வெற்றிலையூரணியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் 2 மகள்களுடன் தனது தந்தை பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இவர் தினமும் ஷேர் ஆட்டோவில் பணிக்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று ஆட்டோவை தவறவிட்டு குறுக்குபாதை வழியாக வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அதை யாரும் எடுத்து பேசவில்லை. ஆனால் மறுநாள் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. உறவினர்களிடம் விசாரித்தும், பல இடங்களில் தேடியும் காணவில்லை.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த மாடு மேய்ப்பவர்கள் சிந்தப்பள்ளிக்கும் மேட்டமலைக்கும் இடையில் உள்ள உப்போடையில் ராஜபாண்டி இறந்து கிடப்பதாக முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராஜபாண்டியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.