பெண்ணுக்கு தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள்
பெண்ணுக்கு தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்தவர் ரகுநாதன். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்தார். குழந்தை இல்லாமல் தவித்து வந்த இந்த தம்பதிக்கு இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய நாள்முதல் டாக்டர்களின் ஆலோசனைப்படி கார்த்திகா கவனமாக இருந்து வந்தார்.
தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள்
இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு நேற்று மதியம் கார்த்திகாவிற்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள், 1 ஆண்குழந்தை பிறந்தது. ஒவ்வொரு குழந்தைகளும் 1¾ முதல் 2 கிலோ வரை இருந்தது. தற்போது 3 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 6 ஆண்டுகள் குழந்தையின்றி தவித்த தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது அந்த தம்பதி மட்டுமின்றி, அவர்களது உறவினர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.