இருதரப்பினர் இடைய நடந்த மோதலில் காயமடைந்த பெண் சாவு
இருதரப்பினர் இடைய நடந்த மோதலில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் சண்முகம். இருவரும் உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்துக்கு போகும் வழி பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி சங்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்து, அதை சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றதாக கூறி சண்முகம், சங்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, சண்முகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கத்தி மற்றும் ஆய்தங்களால் சங்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சங்கர் தரப்பில் முருகேசன், அபிராமி, சிரஞ்சீவி, ஜெயந்தி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதே போன்று சங்கர் தரப்பினர் நடத்திய தாக்குதலில் சண்முகம் மற்றும் ஜெயமோகன் ஆகியோர் காயம் அடைத்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சங்கரின் மனைவி ஜெயந்தி (வயது 45) மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.