மது விற்கும் போட்டியில் காரை ஏற்றி பெண் வியாபாரி படுகொலை


மது விற்கும் போட்டியில் காரை ஏற்றி பெண் வியாபாரி படுகொலை
x

மது விற்கும் போட்டியில் பெண் வியாபாரி காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது45), நெசவு தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (39), இவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் வாங்கி வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை 7 மணி அளவில் மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் இவரது மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதனிடையே மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை விபத்தை நேரில் பார்த்தவர் துரத்திச்சென்றார். வைத்தியர் தெருவில் அந்த காரை அவர் மடக்கினார்.

போலீசார் விரைவு

அப்போது காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடினர். தகவலறிந்த செய்யாறு போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் விஜயலட்சுமியின் கணவர் முருகன் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், ''எங்களுக்கும், செய்யாறுவை சேர்ந்த பிரபு, கொடநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாரி ஆகியோருக்கும் இடையே மது விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 25-ந்தேதி அன்று விஜயலட்சுமியிடம் பிரபு மற்றும் மாரி ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது பிரபு என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார். அவர்கள்தான் எனது மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.

தொழில் போட்டி

மது விற்பதில் ஏற்பட்ட போட்டியில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story