தந்தை இறந்த நிகழ்ச்சிக்கு வந்த போதுவிபத்தில் கணவரையும் பறிகொடுத்த பெண்
தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் கணவரையும் பெண் ஒருவர் பறிகொடுத்தார்.
குழித்துறை:
தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் கணவரையும் பெண் ஒருவர் பறிகொடுத்தார்.
மார்த்தாண்டத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
மார்த்தாண்டம் அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் சசி (வயது 44). தொழிலாளியான இவருடைய மனைவி ஷோபா (40). இவர்களுக்கு ஸ்ரீகுமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த பல வருடங்களாக கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
சசியின் மனைவி ஷோபாவின் சொந்த ஊர் கருங்கல் பகுதியில் உள்ளது. ஷோபாவின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அனைவரும் சொந்த ஊர் வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் கர்நாடக மாநிலம் செல்வதற்காக சசியும், அவரது மகன் ஸ்ரீகுமாரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டனர். அந்த மோட்டார் சைக்கிளை சசியின் உறவினர் ஒருவர் ஓட்டினார். சசியும், ஸ்ரீகுமாரும் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்தனர்.
விபத்தில் சாவு
மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அங்குள்ள ஒரு கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
அப்போது சசி மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினார். இந்தநிலையில் அந்த வழியாக வந்த ஒரு வாகனம் யாரும் எதிர்பாராத சமயத்தில் சசி மீது திடீரென மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த மகன் ஸ்ரீகுமார் அதிர்ச்சி அடைந்தார். கண்முன்னே விபத்தில் சிக்கி தந்தை பலியானதை பார்த்து அவர் கதறி அழுதார்.
சோகம்
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சசியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு ஷோபா குடும்பத்தினருடன் குமரிக்கு வந்த இடத்தில் விபத்தில் கணவரையும் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.