கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற பெண் போலீஸ்நிலையத்தில் தோல்வியில் முடிந்தது குழந்தைகளின் பாசப்போராட்டம்
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறி தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறி தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் வெளிநாட்டில்
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் இடவிளாகம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கொத்தனார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இரட்டை குழந்தைகள்.
கொத்தனார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் இடவிளாகத்தில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். அவர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவையெனில் பக்கத்தில் உள்ள தனது உறவினரான 27 வயதுடைய வாலிபரை அழைக்குமாறு கொத்தனார் கூறியிருந்தார். அந்த வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்ைல. அதை தொடர்ந்து அந்த வாலிபர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்து சிறு, சிறு உதவிகள் செய்து வந்தார். இந்த நிலையில் வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இளம்பெண் மாயம்
சம்பவத்தன்று இளம்பெண் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தொலையாவட்டத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். அங்கு குழந்தைகளை விட்டு விட்டு வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்ப வரவில்லை.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது, மாயமான இளம்பெண் கேரளாவில் ஒரு வாலிபருடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறினர்.
குழந்தைகள் பாச போராட்டம்
அதன்பேரில் நேற்று முன்தினம் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதுகுறித்து இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இளம்பெண்ணின் பெற்றோர் அவருடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
இளம்பெண்ணை கண்டதும் 2 குழந்தைகளும் 'அம்மா..' என அழைத்து கொண்டு ஓடிச்சென்று அணைக்க முயன்றன. ஆனால் குழந்தைகளின் பாச போராட்டத்தை இளம்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை.
இளம்பெண்ணின் பெற்றோர் அந்த குழந்தைகளை காட்டி கள்ளக்காதலனை விட்டுவிட்டு தங்களுடன் வருமாறு கூறினர். ஆனால் இளம்பெண் எதற்கும் செவி சாய்க்கவில்லை. அவர் 'கள்ளக்காதலனுடன் தான் செல்வேன்' என உறுதியாக தெரிவித்தார்.
கண்ணீருடன் திரும்பி சென்றனர்
அவருக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகள் கூறினர். ஆனால், இளம்பெண் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழி இல்லாமல் இளம்பெண்ணை அவருடைய கள்ளக்காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். அவருடைய பெற்றோர் இரண்டு குழந்தைகளும் அழைத்து கொண்டு கண்ணீருடன் திரும்பி சென்றனர். தாய் தங்களை கைவிட்டது கூட தெரியாமல் பாட்டியுடன் சென்ற குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் ேபாலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.