காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
கலசபாக்கம் அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கலசபாக்கம் அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கீழ்பொத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவரும், போளூர் தாலுகா கொம்மனந்தல் கிராமத்தை சேர்ந்த தரணி (22) என்பவரும் காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.
குழந்தை இல்லாத காரணத்தால் தரணியிடம், அவரது மாமனார், மாமியார் மற்றும் கணவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும் தரணியை அவரது தாய் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாதம் ஒருமுறை தாய் வீட்டிற்கு தரணி வருவதும், அங்கு உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதுமாக இருந்தது.
கிணற்றில் குதித்து தற்கொலை
இந்த நிலையில் தரணி வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் மடியில் கல்லைக் கட்டிக்கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் போளூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் குதித்து தரணியை தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பிறகு அவரை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் போலீசார் தரணியின் கணவர் சங்கர் மற்றும் மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.