தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இப்பகுதி மக்கள் வெளியே நடமாட தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடித்து குதறிய தெருநாய்கள்
மனிதர்களுடன் மிகவும் ஒன்றிப்பழகி விடுகிற விலங்குகளில் நாய்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. படுக்கையறை வரை நாய்களை அனுமதிப்பதோடு, ஒரே போர்வையில் அவை நுழைந்து கொள்வதற்கும் சம்மதிப்போர் எண்ணிக்கை அண்மைக்காலமாக பெருகிக்கொண்டு வருகிறது. என்னதான் செல்ல பிரானியாக இருந்தாலும் பராமரிப்பு இன்றி தெருக்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்டு வளரும்போது அதற்கு வெறி பிடிப்பது நிச்சயம் நடக்கக்கூடிய ஒன்றுதான். தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது அவை மனிதர்களை கடித்து குதறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அப்படித்தான் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையன் மனைவி மல்லிகா(வயது 55). இவர் நேற்று காலை அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை
அப்போது அங்கு கூட்டமாக வந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து தனியாகச் சென்ற மல்லிகாவை வெறித்தனமாக கடித்துள்ளன. இதனால் மல்லிகா சத்தம் போட்டு அழுதுள்ளார். பின்பு இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் மல்லிகாவை நாய்களிடமிருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளை தின்றுவிட்டு வெறி பிடித்து காணப்படுகின்றன. பெண் ஒருவரையே தெருநாய்கள் கடித்து குதறியுள்ள நிலையில் குழந்தைகளை எப்படி பள்ளிக்கு தனியாக அனுப்புவது, மேலும் மாலை நேரத்தில் வெளியே விளையாட அனுமதிப்பது என்ற அச்சத்தில் உள்ளோம். இதுபோல் வெறிபிடித்த நாய்களால் எங்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தெருநாய்கள் ஆங்காங்கே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடித்து குதறிவரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும். எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதனால் அப்பகுதி மக்கள் நாய்களால் மிகவும் அச்சத்தில் உள்ளனர் மேலும் அப்பகுதியில் உள்ள நாய்களைப் பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.