வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2022 1:30 AM IST (Updated: 1 Oct 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. இந்த துணிகர செயலில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

எடப்பாடி:-

எடப்பாடியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. இந்த துணிகர செயலில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விசைத்தறி உரிமையாளர் மனைவி

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கோணபைப் பஸ் நிறுத்தம் அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் சுந்தரம். விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி சரோஜா (வயது 50). நேற்று முன்தினம் இரவு சுந்தரம் தாவாந்தெரு பகுதியில் உள்ள தறிக்கூடத்துக்கு சென்று விட்டார்.

இவருடைய மனைவி சரோஜா, தனது உறவினர்களான லட்சுமி, வள்ளி ஆகியோருடன் வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் சரோஜாவின் கழுத்தில் ஏதோ ஊறுவது போன்று இருந்துள்ளது. இதனால் அவர் விழித்து பார்த்தார்.

5¼ பவுன் சங்கிலி பறிப்பு

அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் சரோஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா சங்கிலியை கைகளால் பிடித்தவாறு திருடன், திருடன் என கூச்சலிட்டார். அப்போது முகமூடி கொள்ளையன் தான் வைத்திருந்த கல்லால் சரோஜாவின் கையில் பலமாக தாக்கினான்.

இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து முகமூடி கொள்ளையன் 5¼ பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். சரோஜாவின் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் சரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

போலீசார் விசாரணை

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு, சரோஜாவிடம் விசாரித்தனர்.

அப்போது வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் புகுந்ததும், அதில் ஒருவன் வீட்டின் கதவை திறந்து அங்கு சரோஜா அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதும் தெரிந்தது.

கண்காணிப்பு கேமரா

இதையடுத்து போலீசார் அருகே உள்ள வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சரோஜா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் செல்வதும், சிறுது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர் சம்பவங்கள்

இதேபோல் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருடப்பட்டன. கடந்த மாதம் கள்ளுக்கடை பகுதியில் மற்றும் பூலாம்பட்டி பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதில் தொடர்புடைய மர்ம நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதனால் எடப்பாடி, பூலாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story