மாடு மேய்க்க சென்ற பெண் அடித்துக்கொலை
மாடு மேய்க்க சென்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
குன்னம்:
மாடுகளை மேய்க்க சென்றனர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 55). இவர்களுக்கு சுரேஷ்(38) என்ற மகனும், சுரேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சுரேகாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். சுரேஷ், தனது மனைவி பத்மாவதி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர்கள் தங்களது தோட்டத்தில் சோளம் மற்றும் பருத்தி பயிரிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கண்ணன், விஜயலட்சுமி, சுரேஷ், பத்மாவதி ஆகிய 4 பேரும் வழக்கம்போல் மாடுகளை மேய்க்க அவர்களது காட்டிற்கு ஓட்டிச்சென்றனர். பின்னர் மதியம் சுரேஷ், பத்மாவதி ஆகியோர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து விட்டனர். பின்னர் மாலையில் சுரேஷ் காட்டிற்கு சென்றார்.
ரத்தக்காயங்களுடன் கிடந்தார்
அப்போது அங்கு விஜயலட்சுமி தலையில் பலமாக தாக்கப்பட்டு, ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், உடனடியாக விஜயலட்சுமியை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுரேகா கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்தார். மேலும் விஜயலட்சுமியின் உடலை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தாக்கியதற்கான அடையாளங்கள்
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட விஜயலட்சுமியின் பின்பக்க தலையில் இரும்பு ஆயுதங்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்து உள்ளனர். மேலும் விஜயலட்சுமி அணிந்திருந்த சங்கிலி மற்றும் தோடு அகற்றப்படாமல் இருந்தன.
எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்படவில்லை என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கணவரிடம் விசாரணை
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த விஜயலட்சுமியின் கணவர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது மனைவி தாக்கப்பட்ட நேரத்தில், அருகில் உள்ள காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கொளக்காநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.