தீயில் கருகிய நிலையில் பெண் பிணம்
சேரம்பாடி அருகே தீயில் கருகிய நிலையில் பெண் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்,
சேரம்பாடி அருகே தீயில் கருகிய நிலையில் பெண் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையலர் சாவு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 55). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் தனது வீட்டின் முன்பு உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிக்கந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விஜயலட்சுமி தனது உடலில் மண் எண்ணெய் அல்லது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
இதையடுத்து ஊட்டியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை முடிவு மற்றும் தடயவியல் சோதனையில் தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரும். மேலும் விசாரணையில் விஜயலட்சுமி தனியாக வசித்து வந்தது தெரியவந்தது.
விஜயலட்சுமி தீயில் கருகிய நிலையில் இறந்தது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.