மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி
சுரண்டை அருகே மரத்தில் தொழிலாளி பிணமாக தொங்கினார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 50). தச்சு தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக சுரண்டை வரகுணராமபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் முத்து (19). இவர் சுரண்டையில் இருந்து வாடியூருக்கு செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தில் உள்ள மரத்தில் முத்து, தூக்கில் பிணமாக தொங்குவதாக தோட்டத்தின் உரிமையாளர், பரமசிவத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முத்து உடலை போலீசார் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.