உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு
திருமாந்துறை சுங்கச்சாவடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக தலா 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடந்த 4-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சுங்கச்சாவடி பணியாளரான மாயவேல் என்பவர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் சுங்கச்சாவடி பணியாளர் குன்னம் தாலுகா, வடக்கலூர் அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனாலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.