மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை
ஆம்பூர் அருகே மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைபோட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுகுடித்தபோது தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பு மலைமேடு பகுதியை சேர்ந்தவர் அல்லாஹ் பாகீஷ் (வயது 35). கூலித் தொழிலாளி. இந்தநிலையில் மாங்காய் தோப்பு பகுதியில் நள்ளிரவு அல்லாஹ் பாகீஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஒருவர், அருகில் இருந்த கல்லை தூக்கி அல்லாஹ் பாகீஷ் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி கொலை
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அல்லாஹ் பாகீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.