காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி


காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 Jan 2023 6:45 PM GMT (Updated: 28 Jan 2023 6:47 PM GMT)

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

காட்டு யானை தாக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஜமால் (28). இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு 2 பேரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று, திடீரென நவ்ஷாத், ஜமால் 2 பேரையும் விரட்டியது. இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓட்டம் பிடித்தனர். ஆனால், சிறிது நேரம் ஓடிய நிலையில், 2 பேரும் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து காட்டு யானை இருவரையும் தாக்கியது.

கிராம மக்கள் போராட்டம்

சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து காட்டு யானையை விரட்டினர். காட்டு யானை தாக்கியதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் ஜமால் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நவ்ஷாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காட்டு யானையை பிடிக்க கோரி உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காட்டு யானை தாக்கி உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக படுகாயம் அடைந்த ஜமால் மீட்கப்பட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 22-ந் தேதி காட்டு யானை தாக்கி சிவனாண்டி இறந்தார். ஒரு வாரத்துக்குள் மற்றொரு தொழிலாளி காட்டு யானை தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story