குஜிலியம்பாறை அருகே வீடு புகுந்து திருடிய தொழிலாளிக்கு தர்ம அடி
குஜிலியம்பாறை அருகே வீடு புகுந்து திருடிய தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தக்கோட்டையை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கருப்புசாமியின் வீடு திறந்தநிலையில் இருப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், வீட்டின் அருகில் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் 2 பேர் பீரோவில் இருந்த பொருட்களை எடுப்பது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் வருவதை பார்த்ததும் திருடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை குஜிலியம்பாறை போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் (வயது 27) என்பதும், தப்பியோடியது உடன் வேலை பார்க்கும் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த குமார் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.